Social Icons

Thursday, September 20, 2018

உங்கள் மொபைல் போனை Hard Reset செய்வது எப்படி? கற்றுத்தரும் இணையத்தளம்!

உங்கள் மொபைல் போன் வாங்கும் போது எப்படி வேகமாக இயங்கியதோ அதே வேகத்தில் தற்போதும் இயங்க வைக்க வேண்டுமா? வாங்கும்போது எப்படி எளிமையான தோற்றத்தில் இருந்ததோ அதே எளிமையான தோற்றத்திற்கு மீண்டும் மாற்றிக்கொள்ள வேண்டுமா? நினைவகத்தில் எதுவும் சேமிக்கப்படாமல் எப்படி காலியாக இருந்ததோ அதே போன்று மீண்டும் மாற்றிக்கொள்ள வேண்டுமா? அப்படியானால் உங்கள் மொபைல் போனை ஹார்ட் ரீசெட் (Hard Reset) செய்யுங்கள். ஹார்ட் ரீசெட்டா? அப்டீன்னா? என்னான்னு கேக்குறீங்களா? கவலை வேண்டாம்! அதைதான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஒரு மொபைல் போனை ஹார்ட் ரீசெட் செய்வதன் மூலம் அதில் இருக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் ஒரே நேரத்தில் நீக்கிக்கொள்ள முடியும். அது புகைப்படங்கள், காணொளிகள், செயலிகள் போன்ற எதுவாகவும் இருக்கலாம். மேலும் நீங்கள் செட்டிங்ஸ் ஊடாக மேற்கொண்ட மாற்றங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு அந்த மொபைல் போனுக்கே உரிய பொதுவான செட்டிங்ஸ் வழங்கப்படும்.
ஹார்ட் ரீசெட் செய்வதன் மூலம் உங்கள் மொபைல் போனில் மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் சடுதியாக ஏற்படுவதன் காரணமாக, உங்கள் மொபைல் போன் முன்னரை விட சற்று வேகமாக இயங்குவதை உணர்வீர்கள். நீண்ட நாட்கள் பயன்படுத்திய ஸ்மார்ட் போன்களை ஹார்ட் ரீசெட் செய்த பின்னர் பேட்டரியும் நீண்ட நேரத்திற்கு இயங்குவதை உணரலாம்.
உங்கள் ஸ்மார்ட் போனை நீங்கள் இன்னுமொருவருக்கு விற்கவோ அல்லது வழங்கவோ எண்ணியிருந்தால் இவ்வாறு ஹார்ட் ரிசெட் செய்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஹார்ட் ரீசெட் செய்யும் வழிமுறை ஒவ்வொரு மொபைலுக்கு மொபைல், தயாரிப்பு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். எனவே ஹார்ட் ரீசெட் செய்வதற்கு என அனைத்து ஸ்மார்ட் போன்களுக்கும் பொதுவான ஒரு முறை இல்லை.
ஆகவே குறிப்பிட்ட ஒரு மொபைல் சாதனத்தை எவ்வாறு ஹார்ட் ரிசெட் செய்ய வேண்டும் என்பதை படங்களுடன் மிக அழாகாக கற்றுத்தருகிறது ஹார்ட் ரீசெட் இன்போ எனும் இணையத்தளம். வாசித்து விளங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு வீடியோ மூலமான வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சாம்சங், ஆப்பிள், ஹுவாவி, எல்.ஜி, நோக்கியா உட்பட இன்னும் 100 க்கும் மேற்பட்ட மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களின் மொபைல் சாதனங்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன. மேலும் நான் இந்த பதிவை எழுதும் போது ஹார்ட் ரிசெட் இன்போ இணையத்தளத்தில் 21465 மொபைல் சாதனங்களுக்கான ஹார்ட் ரீசெட் செய்யும் வழிமுறை மற்றும் ஏனைய பயனுள்ள உதவிக்குறிப்புகள் போன்றன பட்டியல்படுத்தப்பட்டிருந்தது.
ஹார்ட் ரிசெட் இன்போ
இந்த இணையத்தளத்தில் மொபைல் போன்களை ஹார்ட் ரீசெட் செய்வதற்கான வழிமுறைகள் மாத்திரமின்றி உங்கள் ஸ்மார்ட் போனுக்குத் தேவையான செயலிகள், இரகசிய இலக்கங்கள் உட்பட அத்தனை தகவல்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தளத்தில் வழங்கப்பட்டுள்ள சேர்ச் பார் (Search Bar) இல் உங்கள் மொபைல் போனின் மாடல் நம்பரை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனை ஹார்ட் ரீசெட் செய்வதற்கான வழிமுறை மற்றும் ஏனைய தகவல்களை பெற்றுகொள்ளலாம். இந்த தளத்தை மொபைல் போன்கள் மூலமாகவும் அணுக முடியும் என்பது அனைவருக்கும் மேலும் பயனுள்ளதாக அமையும்.
ஹார்ட் ரிசெட் இன்போ இணையத்தளத்துக்கு நீங்களும் ஒருமுறை விஜயம் செய்துதான் பாருங்களேன்!

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips