Social Icons

About me..


razaஉலகில் பிறந்த மனிதர்கள் ஒவ் வொருவருக்கும் ஒவ்வொரு வகையான போராட்டம் அவர்களின் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில்தான் உருவெடுக்கும். ஆனால் என்னுடைய வாழ்க்கைப் போராட்டமோ என்; தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே ஆரம்பித்து விட்டது.

ஆம்! 1991ம் ஆண்டு, இலங்கை நாட்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் இடம் பெற்ற கார் குண்டு வெடிப்பின் போது, கர்ப்பத்தில் தரித்திருந்த என்னை அந்தச் சம்பவத்தின் தாக்கம் பாதித்து விட்டது. 1992.04.24ல் தனது தாயார் கருவறையில் இருந்து உடல் ஊனமுற்ற மழலையாக இவ் உலகில் பிரசவித்தேன். எனது தந்தையார் பெயர் ILM. ஜவ்பர். தாயார் பெயர் A.L.S  றம்ஸா.
தங்களின் முதல் குழந்தையை மூன்று மாதத்திலேயே பறிகொடுத்த என் பெற்றோருக்கு இரண்டாவது குழந்தையும் இப்படி ஊனமாகப்பிறந்துள்ளதே என்ற விடயம் பேரதர்ச்சியைத் தந்தபோதிலும், இறைவனின் நாட்டத்தை அவர்கள் பொறுமையுடன் சகித்துக்கொண்டு என்னை அன்பின் அரவணைப்பிலும் பல்வேறு சிரமங்களுடனும், பல கஷ்;டங்களுடனும் வளர்த்து வந்தார்கள்.
உடல் ஊனமுற்றிருந்த போதிலும், இறைவனின் அருட்கொடையால் சரியான மூளை வளர்ச்சியைப் பெற்றிருந்த நான் சிறு வயதிலிருந்தே தான் செல்கின்ற இடமெல்லாம் அடுத்தவர்களின் கேலி, கிண்டல்களால் அவமானங்களை சகித்துக் கொண்டு சமூகத்தில் கிடைத்த கேலி, கிண்டல்களால் அவமானங்களை எல்லாம் எதையும் தாங்கும் இதயமாக மிகவும் பொறுமையுடன் சகித்துக் கொண்டு என்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்த போதிலும் மனதில் உறுதியுடனும் இலட்சியத்துடனும் எனது வாழ்க்கை பயணத்தில் காலடி பதித்தேன்.

razஇருந்த போதிலும், வீட்டுக்குள் முடங்கிக் இருக்காமல் எப்படியாவது பாடசாலைக்கல்வியை ஏனைய பிள்ளைகளைப் போன்று தானும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னை விடவில்லை. இறைவனின் உதவியுடன் பெற்றோரின் தீவிர முயற்சி மற்றும் எனது இளம்பராய ஆசான்களின் தனிப்பட்ட சிரத்தை ஆண்டு எட்டு வரையில் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்த என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்தக் கறுப்பு நாளும் வந்தது.
ஆம்! நான் படித்துக் கொண்டிருந்த பாடசாலையின் அதிபர் திடீரென்று ஒருநாள் எனது தந்தையை வரவழைத்து, வாய்க்கு வந்த படி வார்த்தைகளைக் கொட்டி அவமாப்படுத்தினார். 'இவர் பாடசாலைக்கு வருவதனால் இவருக்கு ஒத்தாசை புரியும் ஏனைய பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கின்றது, இவரை படிப்பித்து ஏன் நேரத்தை வீணாக்குகின்றீர்கள்...?
இவரால் என்ன செய்ய முடியும், இவர் என்ன படித்து ஆளாகி உங்களுக்கு உழைத்துத்தரவா போகின்றார்? இன்னும் சிறுது நாளில் எப்படியும் மரணித்துப் போய் விடுவார். ஏன் நீங்கள் கஷ்ட்டப்பட்டு எங்களுக்கும் கஷ்ட்டத்தை கொடுக்கி;ன்றீர்கள்' என்று மிகவும் கடினமான வார்த்தைகளால் என் தந்தையின் மனதை வருத்தமுறச் செய்தார். அதையும் தாங்கிக் கொண்ட என் பெற்றோருக்கு, பாடசாலையில் இருந்து நிறுத்திவிட்டால், பிள்ளையின் கல்வி பாதிக்கப்படுமோ என்ற கவலையில் மாற்று வழிகளைச் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.
இருந்தாலும் எனது பெற்றோரின் விடா முயற்சியின் காரணமாக தொடர்ந்து காத்தான்குடி ஸாஹிரா வலது குறைந்தோர் பாடசாலை, ஆரையம்பதி புகழிட அன்பக பாடசாலை போன்ற இடங்களில் தனது படிப்பைத் தொடர முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் எதுவுமே நிரந்தரமாக அமையவில்லை. அப்போதுதான், வீட்டோடு பொழுது போற்கிக்காக வாங்கி வைத்திருந்த கணனியை கொண்டு இறைவன் எனது வாழ்கையில் மறு மலர்ச்சிப்பாதையில் ஒளிவீசத் தொடங்கி வைத்தான்.

ஆரம்பத்தில் காத்தான்குடியில் உள்ள அவுஸ்ரேலியன் கணனி கற்கை நிறுவனத்தில் சேர்ந்து கணனி அறிவைப் பெறச் சென்று கொண்டிருக்கும் போது 'சிக்குன் குன்யா' வினால் மறுபடியும் கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வீட்டுக்குள் நடக்க முடியாத நிலையில் முடங்கிக் கிடந்தேன்
இருந்த போதிலும், வீட்டில் இருந்த படியே வீட்டில் இருந்த கணனியை வைத்து  தானாக சில மாதங்கள் கற்றேன். ஓரளவு அடிப்படைக் கல்வி பூரணமாக முடிந்தது. இந்த நேரத்தில் தான், எதேச்சையாக MySoft 2U நிறுவனமும் என்னை பொறுப்பேற்று எனது ஆர்வத்திற்கு ஏற்ற வகையில் கிரபிக்ஸ் (Graphics)  துறையில் விஷேட பயிற்றுவிப்புக்களை எனது வீட்டிற்கு வருகை தந்தே வழங்கியது.
இறைவனின் உதவியுடன் மிகவும் துரிதமாகவும் நுணுக்கமாகவும் விடயங்களை கற்றுக் கொண்ட எனது திறமையைப் பார்த்து வியந்த எனது கணனி ஆசிரியர் கே.எம் மஸாஹிம் அவர்கள் என்னை ஒரு இளம் 'கிரபிக்ஸ் கலைஞர்  (Graphics Designer)” ஆக தமது MySoft 2U (Pvt) Ltd. நிறுவனத்தில் இணைத்துக் கொண்டதோடு எனக்கென ஒரு ஊக்குவிப்புக் கொடுப்பனவும் வழங்கினார்.
எனது அபாரமான கிரபிக்ஸ் திறமையால், MySoft 2U நிறுவனத்திற்கு வருகை தரும் ஏனைய மாணவர்களையும் கூட ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கும் எனது கை வண்ணத்திலும், கலையார்வ எண்ணத்திலுமாக மிளிர்;ந்த விளம்பரங்களை காத்தான்குடியிலுள்ள பத்திரிகையான 'வார உரைகல்' 100வது வாரச் சிறப்புப் பதிப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் மற்றும் 150ஆவது பதிப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் காணப்படுகிறது. அதேபோல், எனது திறமையை உலகிற்கு வெளிப்படுத்தும் விதமாக இந்த இணையதளத்தை வடிவமைத்துள்ளேன்.

இப்பொழுது வீட்டில் இருந்த படியே வீட்டுக்கு தேடிக் கொண்டுவரும் கணனியில் செய்யும் சிறிய சிறிய வேலைகளை Razan Graphics என்ற பெயரில் வீட்டில் இருக்கும் கணனியூடாக செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

'இவர் என்ன உழைத்துத் தரவா போகின்றார்? இன்னும் சிறிது நாளில் இறந்து விடுவார்' என்று ஏளனமாகப் பேசிய நான் படித்த பாடசாலையின் அதிபர் வாயடைத்துப் போகுமளவிற்கு இறைவனின் உதவியுடன் நான் வாழ்ந்து காட்டி கணனி துறையில் புதிய சரித்திரம் படைப்பேன் என்ற நம்பிக்கை எனக்குள் உண்டு. என் இலட்சியம் நிறைவேற இறைவன் துணை புரிய வேண்டுகிறேன்.

1 comment:

 
Blogger Tricks
 
Blogger tips