எமது ஸ்மார்ட் போனில் தமிழ் மொழியை தட்டச்சு செய்ய நாம் ஏராளமான செயலிகளை பயன்படுத்தி இருப்போம் அல்லவா?
அவற்றுள் சில செயலிகள் ஒலிப்பு முறையில் தமிழ் மொழியை தட்டச்சு செய்ய சிறந்ததாக இருக்கும், சில செயலிகள் கையெழுத்தை டிஜிட்டல் தமிழ் எழுத்துக்களாக மாற்ற சிறந்ததாக இருக்கும், சில செயலிகள் குரல் மூலம் தமிழ் மொழியை தட்டச்சு செய்ய சிறந்ததாக இருக்கும். ஆனால் இவைகள் அனைத்தையும் சேர்த்து ஒரே செயலியில் பயன்படுத்தினால் எப்படி இருக்கும். அருமையாக இருக்கும் அல்லவா?
மேற்கூறிய அனைத்தையும் ஒரே கீபோர்ட் செயலியில் பயன்படுத்த விரும்பினால் நீங்கள் பயன்படுத்துங்கள் ஜிபோர்ட் கீபோர்ட் செயலியை. இதனை கீழே உள்ள இணைப்பு மூலம் பதிவிறக்கலாம்.
ஜிபோர்ட் கீபோர்ட் செயலியின் சிறப்பம்சங்கள்:
கூகுள் நிறுவனத்தால் ஸ்மார்ட் போன்களுக்கு வழங்கப்படும் செயலிகளுள் ஜிபோர்ட் செயலியும் ஒன்றாகும். இது வெறுமனே எழுத்துக்களை தட்டச்சு செய்வதற்கு மாத்திரமின்றி கீபோர்டில் இருந்தவாறே கூகுள் தேடலை மேற்கொள்வதற்கு, சொற்களை மொழிமாற்றிக் கொள்வதற்கு, ஜிப் (GIF) படங்களை தேடிப் பெறுவதற்கு என ஏராளமான வசதிகளை பெற்றுக்கொள்ள உதவுகின்றது.
ஆரம்பத்தில் ஆங்கிலம் உட்பட இன்னும் குறிப்பிட்ட சில மொழிகளுக்கு மாத்திரமே ஆதரவளித்த இது தற்பொழுது தமிழ் உட்பட 446 மொழிகளுக்கு ஆதரவளிக்கின்றது.
இதில் விஷேட அம்சம் என்னவெனில் இந்த கீபோர்ட் செயலி தமிழ் மொழிக்கு ஏறாத்தள அனைத்து வசதிகளையும் தருகின்றது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள வசதிகளை நாம் கீழே பார்ப்போம்.
குரல் மூலம் தமிழ் மொழியை தட்டச்சு செய்ய: (Voice Input)
இதில் தரப்பட்டுள்ள “வாய்ஸ் இன்புட்” வசதி மூலம் குறுகிய நேரத்தில் மிகப்பெரிய கதைகள் கட்டுரைகளை கூட தமிழ் மொழியில் எழுதி முடித்திட முடிகின்றது. இந்த கீபோர்ட் செயலியில் நீங்கள் தமிழ் மொழியை தெரிவு செய்த பின்னர் ஜிபோட் கீபோர்டில் வழங்கப்பட்டுள்ள மைக்ரோபோன் ஐகானை சுட்டுவதன் மூலம் நீங்கள் உச்சரிக்கும் தமிழ் சொற்களை இது டிஜிட்டல் தமிழ் எழுத்துக்களாக மாற்றித்தரும்.
தமிழ் மொழியை இலக்கணப் பிழைகள் இன்றி மிக வேகமாக டிஜிட்டல் சாதனங்களில் உள்ளிடுவதற்கு இந்த “வாய்ஸ் இன்புட்” முறை மிகவும் துணையாக இருக்கின்றது.
குறிப்பு: குரல் உள்ளீடு மூலம் தமிழ் மொழியை மிக துல்லியமாக உள்ளிடுவதற்கு கூகுள் செயலியை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக் கொள்க. (கூகுள் செயலியை புதுப்பிக்க/டவுன்லோட் செய்ய இங்கே சுட்டுக)
ஹேண்ட் ரைட்டிங் இன்புட்: (Handwriting Input)

ஸ்மார்ட் போன்களின் திரையின் மேல் நாம் கையால் எழுதும் எமது கையெழுத்துக்களை டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றிக்கொள்ள “ஹேண்ட் ரைட்டிங் இன்புட்” எனும் ஒரு தனியான செயலியையே அறிமுகப்படுத்தி இருக்கின்றது கூகுள் நிறுவனம்.
இருந்தபோதிலும் இவ்வாறு கையெழுத்தை பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களை உள்ளிட விரும்புபவர்களுக்கு என “ஹேண்ட் ரைட்டிங் இன்புட்” வசதியையும் கூகுள் ஜிபோர்ட் செயலியில் வழங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஜிபோர்ட் செயலியில் உள்ள “ஹேண்ட் ரைட்டிங் இன்புட்” வசதியில் தமிழ் மொழி உள்வாங்கப் பட்டிருக்கவில்லை. இருப்பினும் தற்பொழுது இது தமிழ்மொழிக்கும் ஆதவளிக்கின்றது.
ஜெஸ்ச்சர் டைப்பிங்: (Gesture Typing)

வேகமாக தட்டச்சு செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு முறையே “ஜெஸ்ச்சர் டைப்பிங்” எனும் முறையாகும். ஒரு சொல்லில் அடுத்தடுத்து இருக்கக்கூடிய எழுத்துக்களை இடைவிடாது தொடுவதன் மூலம் குறிப்பிட்ட சொல்லை வேகமாக உள்ளிட்டுக் கொள்ளலாம். ஆரம்பத்தில் இது ஆங்கிலம் மற்றும் குறிப்பிட்ட ஒரு சில மொழிகளுக்கே ஆதரவளிக்கக் கூடியதாக இருந்தது. இருப்பினும் இது தற்பொழுது தமிழ் மொழிக்கும் ஆதரவளிக்கின்றது. எனவே நீங்கள் ஜிபோர்ட் பயன்படுத்துபவர் எனின் “ஜெஸ்ச்சர் டைப்பிங்” முறையிலும் தமிழ் மொழியை தட்டச்சு செய்யலாம்.
ஒலிப்பு முறை தட்டச்சு: (Transliteration mode)
இம்முறையில் தட்டச்சு செய்ய எழுத்தாணி, செல்லினம், கூகுள் இண்டிக் கீபோர்ட் போன்ற ஏராளமான செயலிகள் இருக்கின்றன. இருப்பினும் இவ்வாறு தட்டச்சு செய்ய ஜிபோர்ட் செயலியும் வசதியை தருகின்றது. மேலும் நீங்கள் டைப் செய்யும் போது அந்த சொல்லை முன்கூட்டியே பரிந்துரைக்கும் வசதியும் இதில் பாராட்டத்தக்கதாக உள்ளது.
உள்ளீட்டு முறையை அல்லது மொழியை மாற்றுவது எப்படி?

மேற்குறிப்பிட்டவைகள் தமிழ் மொழியை உள்ளிடுவதற்கு ஜிபோர்ட் தரும் பல வழிகள் ஆகும். ஒரு முறையில் இருந்து இன்னுமொரு உள்ளீட்டு முறைக்கு மாற்றிக்கொள்வதற்கும், ஒரு மொழியில் இருந்து மற்றுமொரு மொழிக்கு மாற்றிக்கொள்வதற்கும் ஜிபோர்ட் செயலியில் உள்ள ஸ்பேஸ் பார் (Space Bar) தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வசதிகள் தவிர இன்னும் ஏராளமான பல வசதிகளை தருகிறது இந்த ஜிபோர்ட் எனும் கீபோர்ட் செயலி. நீங்களும் இதனை பயன்படுத்த விரும்பினால் டவுன்லோட் செய்க.
டவுன்லோட் ஜிபோர்ட்
Gboard: ஆண்ட்ராய்டு
Gboard: ஐபோன்
No comments:
Post a Comment