Social Icons

Wednesday, July 1, 2015

முதுகு - மூட்டு வலிகளுக்கு முடிவு கட்டலாம்!

தொகுப்பு: MJM Razan
முதுமையை மகிழ்ச்சியாகக் கழிக்க ஓய்வூதியம், பாலிசி, சேமிப்பு என்று பல்வேறு பாதுகாப்பு வழிகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். ஆனால், உடல் உபாதைகளில் விடாது துரத்தும் முதுகுவலி, மூட்டு வலிகளைக் குறைக்க, மருந்து-மாத்திரை, ஊசி, அறுவை சிகிச்சை என்று நம் உடம்பை மேலும் புண்ணாக்கிக் கொண்டே இருக்கிறோம்!

 'உடம்புக்கும், மணிபர்ஸுக்கும் பாதகமில்லாத எளிய உடற்பயிற்சி முறைகளால் மூட்டு வலி வராமலே தடுத்து நிறுத்த முடியும்!’ என்று நம்பிக்கை மருந்து தடவுகிறார் சித்த மருத்துவர் சிவராமன். 'முதுமை வந்தாலே முதுகு வலியும் வந்துவிடும்’ என்பார்கள். ஆனால், இதில் உண்மையில்லை! கை, கால், மூட்டு எலும்புகளில் தேய்வு என்பது எல்லோருக்கும் பொது. தொழில், வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கங்களைப் பொறுத்து சிலருக்கு மூட்டு வலியானது இளமையிலேயேகூட வரலாம்.


'வாயு இலாது வாதம் வராது’ என்கிறது சித்த மருத்துவம். வாத நோய்களில் ஒருவகைதான் மூட்டுவலி. வயிறு உப்புசம், வாய்வுக் கோளாறு, செரிமானமின்மை, வயிற்றுப் புண்.... போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு வாதம் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். வாயுப் பதார்த்தங்களை விலக்கி வைத்தாலே போதும்; நோயும் இல்லை, மருத்துவச் செலவும் இல்லை.

அதிக உடல் எடை கொண்டவர்கள், அதிக அளவு மாவு- கொழுப்புச் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுபவர்கள், வேலை நிமித்தம் நாள் முழுவதும் நின்று கொண்டே இருப்பவர்கள், நெடுந்தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கும் எலும்புத் தேய்மானம் அதிகமாக இருக்கும். இதனால், விரைவிலேயே மூட்டு மற்றும் முதுகு வலி வந்துவிடுகிறது. ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்கும்போது, இடுப்பு, மூட்டுப் பகுதிகளில் வலி அல்லது தீ பட்டது போன்ற எரிச்சல் உணர்வு ஏற்பட்டால் எலும்புத் தேய்மானம் ஆரம்பித்துவிட்டது என்று அறிந்து கொள்ளலாம்.

தினமும் அதிக நேரம் டூ வீலரில் பயணம் செய்பவர்களுக்கு இடுப்புப் பகுதிகளில் அதிர்வு அதிகமாக இருக்கும். இந்த அதிர்வானது முதுகெலும்புகளை வலுவாகப் பிணைத்திருக்கும் தசை நாண்களின் பிடிப்பைத் தளரச் செய்துவிடும். கழுத்து மற்றும் முதுகெலும்புகளைக் கட்டக்கூடிய தசைகளை வலுவாக்கும் உடற்பயிற்சி, யோகாசனங்களைச் செய்தால் இந்த வலி வராமல் காத்துக் கொள்ளலாம்.

முதுகுவலியை புறமுதுகிட்டு ஓடச் செய்ய சமதளமான தரையில் படுத்துக்கொண்டு, கால் மூட்டுகளை மடக்காமல், இருபத்தைந்து டிகிரி கோணத்தில், மெதுவாக மேலே தூக்கிய நிலையில் நிறுத்திக் கொள்ளவும். இப்படி மேல் நோக்கி நிறுத்தும்போது, கால்களின் முழு எடையையும் இடுப்புத் தசைகள் இழுத்துப் பிடித்துக் கொண்டு, கால்கள் நடுங்கத் தொடங்கும். தினமும் இந்த பயிற்சியைச் செய்யும்போது, இடுப்புத் தசைகள் பலமாகும். இதற்கு 'லம்பா எக்ஸர்சைஸ்’ என்று பெயர்.

இதுதவிர தினமும் சலபாசனம், நவாசனம், தனுராசனம், பவன்முக்தாசனம் போன்ற ஆசனங்களைச் செய்யும்போது, எலும்பு மூட்டுகள் நன்கு வலுவடையும். எந்தவித வலியும் வராமல் தற்காத்துக் கொள்ளலாம்.

கால் மூட்டுகளை வலுவாக்க, கால்களை நீட்டிய நிலையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். மூட்டுகளின் கீழ் ஒரு தலையணையை வைத்து மூட்டுகளால், தரையோடு அழுத்த வேண்டும். இப்படி அழுத்தும்பொழுது கால் மூட்டின் தசைநாண்களும், தொடைப்பகுதி தசைகளும் வலுவடையும். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பயிற்சியைச் செய்தாலே, நம்ப முடியாத அளவிற்கு மூட்டுவலி குறைந்துவிடும்.

உணவுக்கும் மூட்டு வலிக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது. நாம் சாப்பிடும் சில உணவு வகைகள் வாயுவை அதிகப்படுத்தி வாதத்தை உண்டு பண்ணும். இதனால், கை, கால்களில் பயங்கர வலி ஏற்படும். புளி, துவர்ப்புச் சத்துக்கள் உடம்பில் அதிகமாகச் சேர்ந்தால் வாதம் வரும். அன்றாட உணவில், நாம் துவர்ப்புச் சத்தை சேர்ப்பதென்பது மிகவும் குறைவுதான். ஆனால், எல்லா குழம்பு வகை களிலும் கட்டாயம் புளி சேர்க்கப்படுகிறது.

நாற்பது வயதைக் கடந்தவர்கள், கட்டாயம் உணவில் புளியின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். இதுதவிர, அதிக அளவில் வாயுவை உண்டு பண்ணும் வாழைக்காய், கொண்டைக் கடலை, மொச்சைப் பயறு, பட்டாணி மற்றும் கிழங்கு வகைகளை கூடுமான வரையில் தவிர்த்துவிடுவது நல்லது. வாதத்தை அதிகப்படுத்துவதில், குளிர்ச்சிக்கு பெரும் பங்கு உண்டு. குளிர் பானங்கள் குடிப்பதை விட்டொழியுங்கள். இவற்றையெல்லாம் கடைப்பிடித்தாலே 'வலியும் இல்லை; வீணான மருத்துவச் செலவும் இல்லை!'' என்கிறார்.










No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips