Social Icons

Monday, November 3, 2014

நிறுவனத்தை மூடிய "நோக்கியா".. வேலையிழந்த 8,000 பணியாளர்கள்

தொகுப்பு: MJM Razan
சென்னை ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள தனது நிறுவனத்தை மூடியது ‘நோக்கியா’. 8,000 தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழந்து வாழவாதாரத்தினை இழந்துள்ளனர். பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம், நோக்கியா நிறுவனத்தினை விலைக்கு வாங்கிய நிலையில், இந்தியாவில் உள்ள நோக்கியா நிறுவனத்தின் மதிப்பீட்டை ரூ.23,000 கோடிகள் என்று கூறியதால், அதனை விட சீனா மற்றும் வியட்நாமில் ஸ்மார்ட்போன்களை மலிவான விலையில் தயாரிக்க முடியும் என்பதால், சென்னை ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள தயாரிப்பு தொழிற்சாலையை வாங்க மறுத்து விட்டது.


இந்திய வருவாய் துறையினர் நோக்கியா நிறுவனத்திற்கு கொடுத்த ரூ.21,000 கோடிக்கான நோட்டீஸில் ஆரம்பித்தது பிரச்சனை. மேலும், சென்ற வருடம் நோக்கியா நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசும், VAT வரி தொடர்பாக ரூ.2,400 கோடிக்கு நோட்டீஸ் அளித்தது.

நோக்கியாவின் இந்த முடிவால், 8,000 தொழிலாளர்கள் வேலையை இழந்து தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஸ்ரீதரன் வயது 28, நோக்கியாவில் ஆப்ரேட்டராக இருந்தவர், தனது பள்ளிப்படிப்பினை முடித்து நேரடியாக இங்கு வேலைக்குச் சேர்ந்து, கடைசியாக ரூ.15,000 சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். தற்போது அவருக்கு புதிய வேலை கொடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், “ஒருவேளை நோக்கியா எங்களுக்கு வேறு வேலை அளித்தால்தான், நான் எனது திருமணம் மற்றும் எதிர்காலத்தினை பற்றி நினைத்துப் பார்க்க இயலும். எங்களுக்கு வேண்டியது, வேலைதானே தவிர பணம் இல்லை.” என்று கூறினார்.

சென்ற வருடம், நோக்கியாவின் தரக் கட்டுப்பாடு பிரிவில் வேலை செய்து கொண்டிருந்த தேவிப்ரியா, விருப்ப ஓய்வு பெற்றார். ஆனால் இதுவரை ப்ரியாவுக்கு, அவரது அனுபவத்திற்கும் ஏற்ற சம்பளத்துடன் அவரை வேலைக்கு வைத்துக் கொள்ள எந்த நிறுவனமும் முன் வரவில்லை.

”நிறுவனங்கள் எங்களுக்கு வெறும் ஐந்தாயிரம், ஆறாயிரம் சம்பளத்திற்கு அழைகின்றனர், சம்பள உயர்வு பற்றி அவர்கள் பேச விரும்பவில்லை” என்று கூறுகின்றார் தேவிப்ரியா.

நோக்கியா சில மாதங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட 6,000 பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு முறையில் வேலையில் இருந்து நிறுத்தியது. மேலும் 1,500 பணியாளர்களுக்கான தீர்வை பரிசீலித்துக் கொண்டிருக்கின்றது.

”இங்கு வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் +2 முடித்தவர்கள்தான், நாங்கள் மேற்கொண்டு படிப்பது என்பது இயலாத காரியம், மேலும் வெளி நிறுவனங்கள் இளம் பணியாளர்களையே விரும்புகின்றனர்.” என்று மற்றொரு பணியாளர் தெரிவிக்கின்றார்.

இது குறித்து அரசு ஏதும் பரிசீலனை செய்யுமா?? வேலையிழந்தவர்களுக்கு மீண்டும் வேறு இடங்களில் பணிக்கு ஏற்பாடு செய்யுமா?? என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கின்றது.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips