இணைய ஜாம்பவான் கூகுள் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தமிழ் மற்றும் ஏனைய இந்திய மொழிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளது.
தமிழ் மொழியை தட்டச்சு செய்வது, உச்சரிப்பது, குரலை டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றுவது, கையெழுத்துக்களை டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றுவது, இணைய இணைப்பின்றி தமிழ் மொழியை ட்ரான்ஸ்லேட் செய்வது, மற்றும் புகைப்படங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களை உணர்ந்து அதை டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றுவதுஉட்பட இன்னும் பல வசதிகளை தமிழ் மொழிக்கும் வழங்கியுள்ளது கூகுள் நிறுவனம்.
அந்தவகையில் தற்பொழுது மற்றுமொரு பயனுள்ள வசதியையும் தமிழ்மொழிக்கு அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள்.
அதாவது இணையத்தில் இருக்கும் தகவல்களை நீங்கள் வாசித்து அறிய வேண்டும் என்ற தேவை இனி இல்லை. வானொலி மூலம் தகவல்களை எவ்வாறு கேட்கின்றீர்களோ அதே போன்று கேட்டும் அறிய முடியும்.இதற்கு நீங்கள் கூகுள் கோ எனும் செயலிய உங்கள் மொபைல் போனில் நிறுவ வேண்டும். (பதிவிறக்க இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது)
இந்த வசதியை நான் பரீட்சித்துப் பார்த்ததில் இது மிகவும் சிறப்பாக இயங்குகின்றது. சொற்களை உச்சரிக்கும் தொனி வெறும் ஒரு இயந்திரத்தை போல் அன்றி கேட்பதற்கு மிகவும் இயற்கையான தொனியை போல் அமைந்துள்ளது.
இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing) மற்றும் செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) ஆகிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இது இயங்குகின்றது. கூகுள் கோ செயலியானது தமிழ் மொழி ஆங்கில மொழிகளுக்கு மாத்திரம் இன்றி ஹிந்தி, தெலுங்கு உட்பட மொத்தமாக 28 மொழிகளுக்கு ஆதரவளிக்கின்றது.
இதன் மற்றுமொரு சிறப்பான விடயம் என்னவெனில் குறைந்த வேகத்தை உடைய இணைய இணைப்பை நீங்கள் தொடர்புபடுத்தி இருந்தாலும் கூட (2ஜி இணைப்பு) இது செயல்படும் என்பதாகும்.
இந்த புதிய வசதி மூலம் ஒரு இணைய தளத்தில் இருக்கக்கூடிய தகவல்களை அறியும் அதேநேரம் உங்களால் இன்னுமொரு வேலையையும் செய்ய முடியும் அல்லவா? அதேபோன்று தமிழ் மொழியை வாசிக்க சிரமப்படுபவர்களுக்கும் இது மிகவும் உதவியாக அமையும்.

இணையத்தில் உள்ள தகவல்களை உச்சரிக்கச் செய்வது எப்படி?
கூகுள் கோ செயலி மூலம் நீங்கள் இணையப்பக்கங்களுக்கு செல்லும் போது குறிப்பட்ட செயலியின் கீழ் மத்திய பகுதியில் ஒரு ப்ளே பட்டன் காண்பிக்கப்படும். அதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட பதிவில் உள்ள அனைத்து தகவல்களையும் “கூகுள் கோ” (Google Go) செயலியால் வாசிக்கச் செய்ய முடியும்.

No comments:
Post a Comment